புதன், ஆகஸ்ட் 17, 2011

நாடற்ற குடிகள் என்பதாலேயே நாதியற்றவர்களானோம்! அரிமாவளவன்




தொல்காப்பியம் குறைந்தது 7000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட நூல் என்று 900க்கும் மேற்பட்ட ஆதாரங்களை மேற்கோள் காட்டி அறிஞர் குணா எழுதிய தொல்காப்பியத்தின் காலம் என்ற நூல் வெளியீட்டுவிழா திரு. அரிமாவளவன் தலைமையில் சென்னையில் நடந்தது. இன உணர்வாளர் சென்னிமலை விசுவநாதன் நூலை வெளியிட தமிழர் சமயம் முனைவர் தெய்வநாயகம் முதல் நூலைப் பெற்றுக் கொண்டார். முனைவர் அருகோ, தமிழ் தேசியப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் மணியரசன், நகைமுகன், ம. பொன்னிறைவன், உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தலைமையுரையாற்றிய தமிழர்களப் பொதுச் செயலாளர் அரிமாவளவன் தன் உரையில், “தமிழர்கள் நாம் தொடர்ந்து இழந்து வருகிறோம்! கன்னடக் களப்பிரர்கள் 18 நூற்றாண்டுகளுக்கு முன்பாக இந்நாட்டை வன்கவர்பு செய்ததிலிருந்து இழப்புக்கு மேல் இழப்புதான். கண்டவனெல்லாம் வந்தான். வந்தவனெல்லாம் ஆண்டான்! ஆண்டவனெல்லாம் சுருட்டினான். களப்பிரர் முதல் கருணாநிதி வரை சுருட்டல்தான்! இன்னும் இழந்து கொண்டே இருக்கிறோம்.
கோடிக்கணக்கில் சுருட்டியவர்களுக்கு ஓராண்டு ஈராண்டு சிறைத் தண்டனை என்றால் எல்லாருக்கும்கூடத்தான் சுருட்ட ஆசை வரும். இழந்த சொத்துக்களை வட்டியும் முதலுமாக மீட்பதுதான் இயற்கை நீதி. ஆனால், தமிழர்கள் இழந்தவைகளைப் பற்றிக் கண்டுகொள்வதேயில்லை.

விக்கிப் பீடியாவில் தொல்காப்பியம் சமற்கிருதத்திலிருந்து பல சொற்களைக் கையாண்டுள்ளது என்ற பொய்யைப் போட்டு வைத்துள்ளான். சமற்கிருதத்தில் 5 சொற்களில் மூன்று தமிழிலிருந்து எடுக்கப்பட்டது என்று பாவாணர் மெய்ப்பித்திருக்கிறார். கி.பி. 2ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதே சமற்கிருதம் என்று குணா மெய்ப்பிக்கிறார். சமற்கிருதம் என்ற சொல்ல “உருவாக்கப்பட்டது” என்றுதானே பொருள். தமிழரின் நான்மறையைத் தழுவித்தான் நான்கு வேதங்கள் உருவாக்கப்பட்டன என்று ஐயந்திரிபட ஆதாரங்களோடு மெய்ப்பிக்கிறார் குணா. ஆனால் அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழனின் ஆதாரங்களுக்கு யார் செவி மடுக்கப் போகிறார்கள்?

பத்மானபுரம் சொத்துக்கள் தமிழரின் சொத்துக்கள். ஆனால், இன்று தில்லியும் கேரளாவும்தான் அந்தச் சொத்துக்களுக்குப் போட்டி போடுகின்றன. இழந்த தமிழன் வேடிக்கை பார்க்கிறான். 1956ல் எல்லைகளை இழந்தோம். திருவனந்தபுரத்தை இழந்தோம், பெங்களூரை இழந்தோம், திருப்பதி இழந்தோம், எல்லைகளை இழந்தோம், காவிரி இழந்தோம், பாலாறு இழந்தோம், நொய்யலாறு இழந்தோம் இன்னும் பல ஆறுகளை இழந்தோம். இன்று அதன் விளைவுகளை அறுக்கிறோம். தமிழகம் பாலையாகிறது.

தமிழிசைதான் ஏழிசை! களவாடிச் சேர்த்தது கர்நாடக இசை! ஆனால், கர்நாடக இசை கோலோச்சுகிறது. ஏழிசை இருந்த இடம் தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் தமிழிசை விழாவில் தெலுங்கு கீர்த்தனைகள் பாடப்படுகின்றன. சமற்கிருதம் ஓதப்படுகிறது. தமிழில் பாடினால் தீட்டு என்று மேடையைக் கழுவுகிறான். ஆக நாம் உருவாக்கிய இசையை நாமே இழந்தோம்.

களறியின் அடிகளே பரதநாட்டியத்தின் அபிநயங்களாயின. களரி இல்லாது போனது. பரதநாட்டியம் தாம் தீம் என்று ஆரவாரமாய்ப் போடுகிறது!

அணுவியலின் தந்தை டெமாக்ரட்டசு என்கிறது இணைய உலகம். அவன் தமிழகம் வந்து அணுவியல் கற்றது தமிழறிஞர் கணிஆதனிடம். கணிஆதன் கற்றது நற்கணியாரிடம். ஆனால் ஏழை சொல் அம்பலம் ஏறுமா? தமிழரின் அணுவியல் ஏற்றம் பெறாததால் ராமர் பிள்ளையின் கன்னெய்யை இழந்தோம். ராமர் பிள்ளை உருவாக்கிய கன்னெய்க்கும் தண்ணீருக்கும் ஒரு மின்துகள் மாற்றம் இருந்தது. அது அணுவியல் மாற்றத்தால் நிகழ்ந்தது. அது தமிழரின் கலை. இந்தி விஞ்ஞானிகள் இயற்பியல் வேதியல் மட்டுமே அறிந்து வைத்தவர்கள். அவர்கள்தான், ராமர் பிள்ளையை பித்தலாட்டம் என்றார்கள். மாறணம் (ஆல்க்கமி) இழந்தோம். செம்பைப் பொன்னாக்கும் பொன்மாறணம் இழந்தோம். இன்று ஆலுக்காஸ் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இப்படித் தமிழர் இழந்தது எண்ணற்றவைகள். வந்தேறிகளின் சூழ்ச்சியால் இழந்தோம் இழந்தோம் எல்லாவற்றையும் இழந்தோம். இழப்பதற்கு இனி ஏதுமின்றி ஏதிலிகளாய் இன்று திரிகின்றோம். சொந்த மண்ணில் அன்னியப்பட்டுக் கிடக்கின்றோம். ஆட்சி இழந்து வந்தேறிகளிடம் கைகட்டி தமிழன் நிற்கிறான்.

கலைகளை இழந்தோம், மொழியை இழந்தோம், பண்பாட்டை இழந்தோம், வானியல் இழந்தோம், வரலாறு இழந்தோம். இறுதியில் முள்ளிவாய்க்காலோடு ஈழத்தில் 3 லட்சம் சொந்தங்களையும் இழந்தோம். கடற்கரையில் நம் மீனவர்களை இழந்தோம். இன்று அநியாயமாக மரண தண்டனை என்ற பேரில் மூன்று அப்பாவித் தமிழர்களையும் இழக்கப் போகிறோம்.

உலகில் நாம் 12 கோடித் தமிழர்கள் இருந்தும் ஒன்றரைக் கோடிச் சிங்களரிடம் நாம் தோற்றோம். கர்நாடகத்தில் தமிழர்களை இழந்தோம். பர்மாவில் ஒன்றரை லட்சம் தமிழர்களை இழந்தோம். வரலாறு நெடுக சொந்தங்களையும் சொத்துக்களையும் பெண்டு பிள்ளைகளையும் இழந்தே வந்திருக்கிறோம். காரணம் நாடற்றவர்கள் நாம்! நாடற்றவர்களெல்லாம் இந்த நானிலத்தில் நாதியற்றவர்கள் என்பதை உணர மறுக்கிறோம்!

மீட்க வேண்டியவைகளை மீட்காமல் இனி தமிழனுக்கும் வாழ்வில்லை எதிர்காலமுமில்லை. அப்படி அனைத்தையும் மீட்க வேண்டுமென்றால், தமிழனுக்கு என்றொரு நாடு வேண்டும். 50 பேர் வாழ்கிற பிற்காரித் தீவுகளுக்கு ஒரு நாடு இருக்கும்போது 800 பேர் இருக்கிற வத்திக்கானுக்கு ஒரு நாடு இருக்கும் போது 12 கோடித் தமிழர்களுக்கு ஒரு நாடு அமைந்தால் அது என்ன பாவமா?

நாடற்ற குடிகள் என்போர் நாதியற்ற குடிகள் என்பதை உணர்வோம்! தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை உள்ளத்தில், இல்லத்தில் ஊரில், நாட்டில் பதியுங்கள்.”

விழா சென்னை சாந்தோம் அருகில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. தமிழர் பண்பாட்டுக் குழுவினரின் “வருவாண்டா பிரபாகரன்” உள்ளிட்ட பாடல்களால் விழா அரங்கமே முறுக்கேறியது.

செய்தி : ஊடகபிரிவு . தமிழர் களம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக