செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

தமிழ்நாட்டு அரசியலே தாயக விடுதலையின் திறவுகோல்! பாவலரேறு விழாவில் தமிழர்களம் அரிமாவளவன் எழுச்சியுரை!


புதுச்சேரியில் செந்தமிழர் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட பாவலரேறு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. திரு. ந.மு. தமிழ்மணி, சொல்லாய்வறிஞர் அருளியார், தமிழர்களத்தின் புதுவை மாநிலச் செயலாளர் பிரகாசு உள்ளிட்டோர் கலந்து கொண்ட அக்கூட்டத்தில் அரிமாவளவன் சிறப்புரையாற்றினார்.
“முள்ளிவாய்க்கால் நிகழ்வு என்பது அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஈழ மண்ணில் நடந்து வருகிற ஓர் இன அழிப்புக் கொடுமைகளின் ஒரு பகுதி! இப்படித்தான் தமிழினம் அங்கு காலாகாலமாக அழிக்கப்பட்டு வருகிறது என்பதை உறங்கிக் கிடந்த உலகிற்கு உசுப்பிச் சொன்ன ஓர் நிகழ்வு! அறுபது ஆண்டுகளாக ஈழத்தில் நடக்கிற அக் கொடுமைகள் ஈராயிரம் ஆண்டுகளாக உலகப்பரப்பில் தமிழருக்கு நடக்கும் அநீதிகளுக்கு மற்றுமொரு சாட்சி!
கன்னடக் களப்பிரர்கள் 300 ஆண்டுகள் தமிழர் நிலத்தை ஆக்கிரமித்து ஆண்டபோது தமிழரின் தலைகளைக் கொய்து மதுரையைச் சுற்றி அடுக்கி வைத்துக் கொக்கரித்தார்கள் என்பது வரலாறு! ஆக, ராசபக்சேக்களும், கோத்தபாயாக்களும் அன்றே இருந்திருக்கிறார்கள்!
நாயக்க மன்னர்கள் தமிழர் நாட்டை வன்கவர்பு செய்தபோது மீனவப் பெண்களை பாலியல் வல்லுறவு கொண்டு சிதைத்து அழித்தார்கள் என்று வரலாறு சொல்லுகிறது.
மும்பையிலிருந்து மராத்திய வெறியர்களால் தமிழர்கள் ஓட ஓட விரட்டப்பட்டார்கள். அவர்தம் குடியிருப்புகளெல்லாம் தரைமட்டமாயின!
பர்மாவில் சயாம் ரயில்பாதை போட்டபோது ஒரு லட்சத்து ஐம்பாதாயிரம் தமிழர்களைச் சப்பானியப் படைகள் கொன்று குவித்திருந்தன!
கர்நாடகத்தில் 1991ல் காவிரிக் கலவரம் என்ற பேரில் கொலைகள், கற்பழிப்புக்கள், சொத்தழிப்புக்கள் என்று தமிழர் பட்ட துயரங்கள் சொல்லி மாளாது. அன்றைக்கு ஆறு லட்சம் தமிழர்கள் கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு இடப்பெயர்வு செய்தார்கள்.
தமிழகக் கடற்கரைகளில் 540க்கும் மேலான எம் மீனவர்கள் படு பயங்கரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் காயப்பட்டிருக்கின்றனர்.
தமிழகக் காடுகளில் வீரப்பனைத் தேடுகிறோம் என்ற பேரில் கர்நாடகக் காவல்துறையினரால் கொல்லப்பட்டோரும், சிதைக்கப்பட்டோரும், கற்பிழந்து தவித்தோரும் எண்ணிக்கையிலடங்கார்!
மலேசியாவில், மணிப்பூரில், சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் உரிமைகளற்றக் குடிகளாக குறுக்கப்படுவது காலாகாலமாக நடைபெற்றுவரும் நிகழ்வுகள்!
இன்றைக்கு தமிழர்கள் நாடிழந்து ஏதிலிகளாய் சொந்த மண்ணிலும் உலகின் எல்லா நாடுகளிலும் உழன்று வருகின்றனர். அரணாய் நின்று காக்க வேண்டியத் தாய்த் தமிழகம் இந்தியக் கொத்தடிமைக் கூடாரத்தின் ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கிறது. இல்லாத திராவிடம் என்ற கொடுஞ்சிறையில் அது நலிவுற்றுக் கிடக்கிறது. இந்த நிலை மாறினாலேயே உலகத் தமிழரின் வாழ்வில் விடியல் பிறக்கும்! ஈழ விடுதலையை இங்குள்ள மேடைகளில் முழங்கியே நான் பெற்றுத் தருவேன் என்பது கூரையேறிக் கோழி பிடிக்க இயலாதவன் வானம் ஏறி வைகுண்டத்திற்கு வழி காட்டும் வம்படி வீரர்கள்! சொல்லடித் தீரர்கள்!!
ஈழ விடுதலைக்கு எதிரானவர்கள் சிங்களப் பேரினவாதிகள் என்று மட்டும் நினைத்துக் கொண்டு இருக்காதீர்கள்! ஈழத்தை முளையிலேயே கிள்ளி நசுக்கி எறிந்துவிட வேண்டும் என்பதில் எல்லாரையும்விட இந்தியாதான் முண்டியடித்துக் கொண்டு முனைந்து நிற்கிறது. ஈராயிரம் ஆண்டுகாலப் பகை இது! இதை நாம் உணராமல் இலங்கையையும் சிங்களனையும் தமிழ்நாட்டு மேடைகளில் கொத்திக் காய வைப்பது என்பது நோகாமல், நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தாமல், துளியேனும் குருதி சிந்தாமல் விடுதலையை விருட்டென்று பறித்துவிடலாம் என்று நாம் காணுகிற கற்பனைக் கனவு.
எதிரி தில்லியில் இருக்கிறான்! அவன் தமிழர்நாட்டை எண்ணி எண்ணியே பதை பதைக்கிறான்! “பாவிப் பயல்கள் எப்போது தனித்தமிழ்நாடு கேட்பார்களோ” என்று உறங்காமல் விழித்துக் கிடக்கிறான்! தில்லியில் சுருண்டு கிடக்கிற அந்த நச்சு நாகத்தின் உச்சந் தலையில் ஓங்கி அடிக்க வேண்டுமென்றால் “இனத்திற்கு ஒரு நாடு” என்கிற உலகப் போக்கிற்கு தமிழ்நாட்டில் நாம் உருக் கொடுக்க வேண்டும்! உரக்கக் குரல் கொடுக்க வேண்டும்!! தாயகத்துத் தமிழர்களுக்குத் தனிநாடு வேண்டும் என்ற போராட்டம் வலுப்பெற வேண்டும். இதுவே, பாவலரேறு அவர்களும் கால் நூற்றாண்டுக்கும் மேலாகவே கனிந்தும் கடிந்தும் சொன்னது!
தமிழர் தேசியம் மலர வேண்டுமென்றால் நாம் அயராது பாடுபட வேண்டும்! அப்படிப் பாடுபடுவது என்பது மாதமொருமுறை நடத்தும் கருத்தரங்குகளில் கேட்ட கருத்துக்களையே மீண்டும் மீண்டும் கேட்க, கேட்டவர்களே மீண்டும் மீண்டும் கூடுவது அல்ல! அல்லது உண்ணா நோன்பு போன்ற போராட்டங்கள் வழியில் நம்மை நாமே வருத்திக் கொள்ளவதுமில்லை. நமது கருத்துக்களை நமது குடும்ப உறுப்பினர்கள், உற்றார், உறவினர்கள் என்ற அளவிலே முதலில் பரப்பிட வேண்டும். பின்னர் அதுவே பரந்துபட்டத் தளங்களுக்கு நம்மை இட்டுச் செல்லும். நமது இளைய தலைமுறைக்கு நமது நண்பர் யார்? எதிரி யார்? என்ற அடிப்படைப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஈழத்தில் நம் சொந்தங்கள் கொத்துக் கொத்தாக மடிய இந்தியப் படைத்துறை மற்றும் அயலகத் துறை அதிகாரிகள் அதிலும் பெரும்பாலானவர்கள் அண்டை மாநிலத்து மலையாள அதிகாரிகள் படை வெறியாட்டம் போட, தமிழகத்தின் வீதிகளில் அவர்தம் சொந்தங்கள் தகதகக்கும் தங்கக் கடைகளை விரிக்கத் தொடங்கினார்கள். எவ்வித அச்ச உணர்வும் இன்றி அவர்கள் இங்கே கோலோச்ச முடிகிறது. காரணம், தன் எதிரி யார்? என்பதை விளங்காதத் தமிழர்கள் இங்கே இருக்கிறார்கள். “வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும் துணை வலியும் தூக்கிச் செயல்” என்ற வள்ளுவனின் கோட்பாட்டையே மாவோ பின்னாளில், “நண்பன் யார்? எதிரி யார்?” என்று வகுத்துக் கொண்ட பின் “களமிறங்கு” என்றான். தமிழ்நாட்டில் இது போராடும் காலம்! விடுதலையை விழிகளில் தாங்கி விடுதலை நெருப்பை நெஞ்சில் ஏந்தி நடை போட வேண்டிய நேரமிது! நம்மில் இருக்கும் சிறு சிறு பூசல்களைக் கொளுத்திப் போட்டுவிட்டு தமிழர் தேசியம் காண கரம் கோர்ப்போம்!
தனித் தமிழ்நாடும் தனிஈழ நாடும் நம் இரு விழிகள்!




--
என்றும் தமிழ் உணர்வுடன்
அன்புடன்,

"தளவாய்"
பனிவளன்(+919842978005)

1 கருத்து:

  1. நாடோடிகள் கலைக்குழு பெயரில் “சயாம் பர்மா மரணரயில் பாதை” என்ற ஆவணப்படம் தயாரித்துள்ளோம். கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின் ஒரு சோகம் தோய்ந்த கலை வடிவம் தான் “சயாம் பர்மா மரணரயில் பாதை (PG)” ஆவணப்படம்.
    Facebook : https://www.facebook.com/Nadodigalcreations
    IMDB : http://www.imdb.com/title/tt3883834/
    ஆவணப்படம் பற்றிய சில தகவல்கள் :
    தமிழுலகம் அதிகம் அறிந்திடாத ஒரு துயரம் சயாம்(தாய்லாந்து) – பர்மா மரணரயில் பாதை. சிங்கப்பூர் – மலாயாவை இரண்டாம் உலகப்போர் நேரத்தில் கைப்பற்றிய ஜப்பானிய இராணுவம், அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைவதற்காக மிக நீண்ட ரயில்பாதை ஒன்றை அமைத்தது. அதை அமைக்கும் பணியில் 30,000 பிரிட்டீஷ் – ஆஸ்திரேலியப் போர்க்கைதிகளோடு, ஒன்றரை இலட்சம் (மலாயாவின் ரப்பர்த்தோட்டத் தொழிலாளர்கள்) தமிழர்களையும், 50,000 பர்மியர்கள், சீனர்கள், இந்தொனேசியர்கள் மற்றும் மலாய் இனத்தவர்களையும் கொண்டு சென்றது.
    ஒரே நாளில் சயாம் மற்றும் பர்மா ஆகிய இருமுனைகளில் தொடங்கப்பட்ட இந்த இரயில்பாதை என்னும் துயரக்கதையின் பக்கங்கள் கனமானவை. ஏறத்தாழ 72 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இக்கொடியச்சம்பவத்தில் 80,000 தமிழர்கள் உள்ளிட்ட 1,50,000 ஆசியத்தொழிலாளர்கள் தம் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். கண்ணீரைப் பெருக வைக்கும் இச்சம்பவம் குறித்து 64 நிமிடங்கள் கொண்ட ஒரு ஆவணப்படம் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
    மரணரயில்பாதையில் பணியாற்றி உயிருடன் மீண்டு, இன்று தங்களது வாழ்நாளின் இறுதிக்கணங்களை எண்ணிக் கொண்டிருக்கும் முதியவர்கள் பலர் அந்த நினைவலைகளை இப்படத்தில் பகிர்ந்துள்ளனர். மனித உரிமைகள் பற்றிக் கவலைப்படும் எவரின் உள்ளத்திலும் ஆழமான காயங்களை உருவாக்கும் பல சம்பவங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர். மேலும் பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆய்வாளர்களும் பங்கேற்க உரிய ஆவணங்கள்/ஆதாரங்களோடு இப்படம் நிறைவடந்துள்ளது.
    பர்மா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய 5 நாடுகளில் படப்பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் இந்த இரயில்பாதையில் தம் அரிய பிறவியைத் தியாகம் செய்த இலட்சக்கணக்கான ஆசியத்தொழிலாளர்களுக்குச் செலுத்தும் அஞ்சலியாகவே அமைந்துள்ளது. இப்படத்திற்கான ஆதாரங்கள்/தகவல்கள் ஆகியவை கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் ஆவணக்காப்பகங்கள் மற்றும் நூலகங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன.
    இப்பணியில் இறந்த (இழப்பீடு உள்ளிட்டச் சலுகைகளைப் பெற்ற) பிரிட்டீஷ்-டச்சு-அமெரிக்காவைச் சேர்ந்த 16000 வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 ஆம் நாள் ANZAC DAY என்ற பெயரில் நினைவுத்தினங்கள் உலகம் முழுக்க அனுசரிக்கப்படுகின்றன. 1,50,000 ஆசியத்தொழிலாளர்கள் பற்றி எவரும் கவலை கொண்டதில்லை.
    SIAM BURMA DEATH RAILWAY (Buried tears of asian labourers) என்னும் தலைப்பில் ஆங்கிலத்திலும் சயாம்-பர்மா மரணரயில் பாதை (எழுதப்படாத ஆசியத் தமிழர்களின் கண்ணீர்க் கதை) என்ற தலைப்பிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
    நன்றி.
    இப்படிக்கு,
    ராஜ்சங்கர்

    பதிலளிநீக்கு