புதன், ஆகஸ்ட் 24, 2011

இறுகிப் போன மத கட்டுமானங்களை உடைப்போம் வாருங்கள்


இறுகிப் போன மத கட்டுமானங்களை உடைப்போம் வாருங்கள்
புத்தக வெளியீட்டு விழாவில் அரிமாவளவன் உரை

திரு. அன்வர் பாலசிங்கம் அவர்கள் எழுதிய “கருப்பாயி என்கிற நூர்ஜகான்” என்ற நூல் வெளியீட்டுவிழா திருநெல்வேலியில் நடந்தது. 30 ஆண்டுகளுக்கு முன்பாக சாதிக் கொடுமையை எதிர்த்து நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தில் இசுலாமுக்கு மதம் மாறிய தமிழர்களின் வாழ்வு எத்தகைய சிக்கல்களுக்குள் சிக்கிக்கிடக்கிறது என்பதை விவரிக்கும் நாவல் இது. வெளியீட்டு விழாவிற்கு பழம்பெரும் எழுத்தாளர் தி.க.சி. அவர்கள் தலைமையில் நடந்தது. அரிமாவளவன் நிறைவுரை ஆற்றினார். “மதம் வேறு! சமயம் வேறு! மதம் என்பது கோட்டுபாடுகள், கோயில்கள், பூசாரிகள் ஆகியனவற்றைச் சுற்றியே இருக்கும். பொருளாதாரமும் அதிகார வெறியுமே அதன் உள்ளடக்கம். சமயம் என்பது முற்றிலும் வேறானது, சமயம், மனிதனையும் ஆன்மீகத்தையும் மையப்படுத்தியிருக்கும். நாராயணகுருவும் இயேசுவும் கபீரும் சமயவாதிகள். ஹிரோசிமா நாகசாகியில் அணுகுண்டு போடக் காத்திருந்த விமானிகளை ஆசிர்வதித்து அனுப்பியவர் ஒரு கிருத்துவச் சாமியார். அவர் மதவாதி. மதங்களுக்குள் மனிதர்கள் இருக்க முடியாது. அப்படியானால் லட்சக்கணக்கில் கூடுகிறார்களே? என்று கேட்கலாம். அவர்களுக்கு மயக்க மருந்து போட்டு பூசாரிகள் இழுத்து வருகிறார்கள். ஆத்திகத்தில் மட்டுமல்ல நாத்திகத்திலும் பூசாரிகள் உண்டு. வீரமணி பகுத்தறிவு பேசுகிற பெரிய பூசாரி! அவரும் மடம் வைத்துத்தான் நடத்துகிறார். “சாதிகளுக்கு இடையே இருக்கிற மண்சுவர்கள் உடைந்தால் போதாது மனச்சுவர்கள் உடையவேண்டும்” என்றார் திரு. தி.க.சி. அவர்கள். அவர் சொன்ன அந்த மனச்சுவர்கள் உடைய வேண்டுமென்றால், மதங்கள் உடையவேண்டும். மதமாற்றம் நடக்க வேண்டும். அந்த மத மாற்றம் என்பது இந்து மதத்திலிருந்து இசுலாம் நோக்கிப் போவதோ அல்லது இசுலாத்திலிருந்து பவுத்தம் நோக்கிப் போவதோ அல்லது பவுத்தத்திலிருந்து கிருத்துவம் நோக்கிப் போவதோ இல்லை. கிருத்துவ மதத்தை உடைத்து கிருத்துவச் சமயத்திற்கு போக வேண்டும். அப்போது அங்கு சிலுவைச்சாவுகளும், சிலுவைப்போர்களும் சுரண்டல் வல்லாதிக்கங்களும் இருக்காது. இந்து மதத்தை உடைத்து இந்து சமயத்திற்குப் போகவேண்டும். அங்கு சாதீய ஏற்றத்தாழ்வுகளும் பிராமணீயக் கொடுமைகளும் இந்துத்துவாப் பிதற்றல்களும் இருக்காது. இசுலாம் என்கிற மதத்தை உடைத்து இசுலாம் என்கிற சமயத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். அங்கே மதத்தின் பேரால் வன்முறைகளும், ஒடுக்குமுறைகளும் இருக்காது. ஆகவே, மதங்களும் மடங்களும் உடைந்தால்தான் மனிதம் வாழும். மடமை வீழும். பல்வேறு மதங்களுக்குள் சிக்கித் தவிக்கிற சமயவாதிகள், சமூக ஆர்வலர்கள், மாந்த உரிமைப் போராளிகள் ஓரணியில் இன்று நிற்க வேண்டும். உள்ளிருந்தே உடைப்பை ஏற்படுத்த வேண்டும். முட்டைகளை உள்ளிருந்தே உடைத்தால்தான் புதிய உயிராற்றல் ஒன்று பிறக்கும். கூமூட்டைகளை மட்டுமே அடித்து உடைக்கவேண்டும்.
மதங்கள் மாந்த உரிமைகளை நசுக்குகின்றன. மதத்தின் பேரால் அரசுகளும் அரக்கர்களும் மனிதர்களைக் கொல்கின்றார்கள். மதம் மாறுவதால் மாற்றம் வந்துவிடும் என்று எண்ணியவர்கள் இன்று ஏமாற்றத்துடன் நிற்கிறார்கள். இவர்கள் பழைய மதத்திற்குத் திரும்புவது என்பது எரிநெருப்பா எண்ணைச்சட்டியா என்கிற கதையில் போய் முடியும். எந்த உரிமைகளையும் யாரும் நமக்கு அள்ளிக் கொடுக்கப்போவதில்லை. கேட்டுப்பெற்றால் அது விடுதலையே அல்ல. எடுத்துக் கொள்வதே விடுதலை. தரமறுக்கிறவனிடம் நமது உரிமைகளை அடித்துப் பிடுங்குவதே அறப்போராட்டம்! அதுவே, உண்மை விடுதலை. அந்த விடுதலைப் பயணத்தில் இந்த நூலும் ஒரு படைக்கருவியாக இருக்கும் என்று நம்பி வாழ்த்துகிறேன்” என்றார்.
கூட்டத்தில் இம்மானுவேல் தேவேந்திரரின் மகள், எழுத்தாளர் தொ.பரமசிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி :ஊடகபிரிவு தமிழர் களம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக