சனி, ஆகஸ்ட் 27, 2011

தூத்துக்குடியில் தமிழர் களத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்






27.08.2011.- தூத்துக்குடி

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்க கூடாது என்றும் , கச்சதீவை மீட்க கோரியும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் படி தமிழர் களத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி பழைய நகராட்சி கட்டிடம் முன்பு நிகழ்ந்தது. ஆர்பாட்டத்தில் பெருமளவில் பெண்களும் , பொதுமக்களும் , மீனவர்களும் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர் . தமிழர் களத்தின் பொது செயலாளர் திரு . அரிமாவளவன் அவர்கள் பின்வருமாறு பேசினார் .

தாய்த் தமிழ்நாட்டின் தமிழர்களே,

கூடங்குளம்!

அன்று ஓர் அழகிய சிற்றூர். நாம் பாடித் திரிந்த பழகி மகிழ்ந்த ஓர் இனிய ஊர். இன்று தென் தமிழகத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி வைத்திருக்கும் ஓர் அதிர்ச்சிச் சொல்லாக மாறி நிற்கிறது.

கடந்த பல ஆண்டுகளாகப் எத்தனையோ பேர் போராடியும்கூடத் தான் நினைத்ததை நிறைவேற்றியே தீருவேன் என்பதுபோல அரசு நடந்து கொண்டிருக்கிறது. அணுஉலை வந்துவிட்டது. பேரதிர்ச்சியுடன் பெருஞ்சத்தம் கேட்கத் தொடங்கிவிட்டது.

மறுபுறத்தில் எத்தனைக் காலம்தான் போராடுவது? என்று சலித்துப் போன மக்கள்! கூடங்குளம் அணுமின் நிலையம் இன்று நம் தலை மீது தொங்கிக் கொண்டிருக்கிற பட்டாக்கத்திபோல பயமுறுத்துகிறது. நமது எதிர்காலமும் நமது பிள்ளைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி நிற்கிறது.

காவிரிக்காக தஞ்சை விவசாயிகள் போராடுகிறார்கள். மீதமுள்ள தமிழ்நாடு வேடிக்கை பார்க்கிறது! கச்சத்தீவுக்காக அல்லது மீனவர் படுகொலைக்காக ராமேசுவரம் மீனவர்கள் போராடுகிறார்கள். மற்றவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். ஈழத்தமிழருக்காக தமிழர்தேசிய இயக்கங்கள் போராடுகின்றன. மற்றவர்கள் பார்வையாளர்கள். அதுபோலவே கூடங்குளத்திற்காக ஒரு சில கிராமங்கள் இப்போது போராடுகின்றன. மீதித் தமிழகம் வேடிக்கை பார்க்கிறது. இந்த மாதிரியான நிலை ஆட்சியாளர்களுக்கு இன்னும் ஊக்கமாய் இருக்கிறது.

போராடுகிற மக்களுக்கிடையில் இனி ஒரு புரிந்துணர்வும், கைகோர்ப்பும், தோள்கொடுப்பும் இல்லையென்றால் தமிழர் நாம் எல்லோருமே விழப்போகிறோம், வீழ்த்தப்படப் போகிறோம். இது ஓர் எச்சரிக்கை உணர்வு மட்டுமல்ல, எதார்த்தமும்கூட!

இறுதியாக தமிழர் களத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் நிகழ்வில் கலந்து கொண்டு போராட்டம் சிறப்பாக நடைபெற்றதர்காக நன்றி தெரிவித்தார்.

செய்தி :ஊடகபிரிவு தமிழர் களம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக