ஞாயிறு, டிசம்பர் 18, 2011

கேரளாவைக் கண்டித்து கூடலூரில் 1 லட்சம் பேர் திரண்டு பேரணி-போடியில் உண்ணாவிரதம்

ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 18, 2011, 15:22 [IST]



கூடலூர்: கேரளாவைக் கண்டித்து இன்றும் தேனி மாவட்டத்தில் ஒரு லட்சம் பேர் திரண்டு மாபெரும் பேரணி நடத்தியுள்ளனர். மேலும் போடிநாயக்கனூரில் 3000 பேர் திரண்டு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.

தேனி மாவட்டத்தில் கடந்த 14 நாட்களாக கேரளாவைக் கண்டித்து தொடர் பேரணிகள், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், சாலை மறியல்கள் நடந்து வருகின்றன.

கேரளாவைக் கண்டித்து நடந்து வரும் தொடர் போராட்டங்கள், கொந்தளிப்பு காரணமாக கேரளாவுக்கான குமுளி வழியே போக்குவரத்து தொடர்ந்து முடங்கிப் போயுள்ளது.

தொடர்ந்து லட்சக்கணக்கானோர் திரண்டு தினசரி பேரணி நடத்தி காவல்துறையை திக்குமுக்காட வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்றும் கூடலூர் வழியாக குமுளியை நோக்கி லட்சம் பேர் திரண்டு மாபெரும் பேரணி நடத்தினர். ஆனால் அவர்களை போலீஸார் தொடர்ந்து செல்ல அனுமதிக்கவில்லை.

இதையடுத்து தேனி சாலையில் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரும் திரளான பெண்களும் இதில் கலந்து கொண்டனர்.

போராட்டம் நடத்தியவர்கள் கூறுகையில், கேரள அரசு புதிய அணை கட்டக் கூடாது.முல்லைப் பெரியாறு அணையை இடிக்கக் கூடாது. இடித்தால் ஆயுதப் போராட்டத்திலும் குதிக்கத் தயங்க மாட்டோம் என்று எச்சரித்தனர்.

இதற்கிடையே போடிநாயக்கனூரில் உள்ள வ.உ.சி. திடலில் 3000 பேர் கூடி உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று நடத்தினர்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக