புதன், டிசம்பர் 21, 2011

கேரளாவில் கல்லடி; தமிழகத்தில் தடியடி: ஐயப்ப பக்தர்களின் அவல நிலை!

கேரளாவில் கல்லடி; தமிழகத்தில் தடியடி: ஐயப்ப பக்தர்களின் அவல நிலை
புதன்கிழமை, டிசம்பர் 21, 2011,

செங்கோட்டை: கேரளாவில் மலையாள ரவுடிகளிடம் அடிபட்டு திரும்பிய தமிழக ஐயப்ப பக்தர்கள் மீது செங்கோட்டை அருகே தமிழக போலீசார் அறிவிப்பின்றி தடியடி நடத்தியதால் பதற்றம் உருவானது.

முல்லை பெரியாறு அணை பிரச்சனையால் செங்கோட்டை வழியாக சபரிமலைக்கு செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் தாக்கப்படுவதோடு பக்தர்களும் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்திலிருந்து கேரளாவுக்கு அரிசி மூடை ஏற்றி சென்ற லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

லாரியை செல்வராஜ் என்பவர் ஓட்டி சென்றார். புனலூரை அடுத்து கொன்னிகொடு பகுதியில் சென்றபோது அங்கு ஆயுதங்களுடன் வந்த கேரளத்தவர்கள் சிலர் லாரியின் கண்ணாடியை உடைத்தனர். அவரையும் தாக்கினர். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.

ரவுடிகள் தாக்குதல்

இதை தொடர்ந்து செங்கோட்டையிலிருந்து காய்கறி ஏற்றி சென்ற லாரிகளும் தாக்கப்பட்டன. இதனால் பிரனூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல் கும்பகோணம் பகுதியிலிருந்து சபரி்மலைக்கு சென்ற கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களின் 2 வேன்களும் சேதப்படுத்தப்பட்டன. டிரைவர்களையும் கேரளக்காரர்கள் தாக்கினர். இதனால் காயமடைந்த தமிழக ஐயப்ப பக்தர்கள் மீண்டும் தமிழக எல்லை பகுதியான பிரனூருக்கு வந்தனர்.

போலீஸ் தடியடி

இதற்கிடையே புனலூர் பகுதியில் வெள்ளிமலை பகுதியில் செங்கோட்டை பகுதியை சேர்ந்த டிரைவர் ஒருவரை கேரளத்தவர்கள் அரிவாளால் வெட்டியதாக வதந்தி பரவியது. இதனையடுத்து அந்த வழியாக சபரிமலைக்கு சென்று கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை பாதிக்கப்பட்டவர்கள் நிறுத்தி செல்ல வேண்டாம் என்று தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த தென்காசி டிஎஸ்பி பாண்டியராஜன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொது மக்கள் மீது தடியடி நடத்தினர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அங்கேயம் அடிக்கிறார்கள், தமிழகத்திலும் போலீஸார் அடிக்கிறார்கள், நாங்கள் எங்கே போவது, ஏன் இந்த அவல நிலை என்று பல ஐயப்ப பக்தர்கள் புலம்பியதைப் பார்த்தபோது மிகப் பரிதாபமாக இருந்தது

nandri : thatstamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக