செவ்வாய், டிசம்பர் 27, 2011

முல்லைப் பெரியாறு: 28ம் தேதி பேரணி- ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க 40 சங்கங்கள் முடிவு!

செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 27, 2011,


சின்னமனூர்: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடைசி எச்சரிக்கை விடுப்பது போல தேனி மாவட்டம் சின்னமனூரில் நடந்த 40 சமுதாய சங்கங்களின் கூட்டு ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தங்களது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து விட்டு தீவிரப் போராட்டத்தில் குதிப்பது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் போக்கைக் கண்டித்து கடந்த 21 நாட்களாக தீவிரமாக போராடிய மாவட்டம் தேனி. தேனி மாவட்டத்தின் அத்தனைப் பகுதிகளிலும் கேரளாவைக் கண்டித்து கடுமையான போராட்டங்கள் வெடித்தன. தினசரி லட்சம் மக்கள் குமுளியை நோக்கி ஊர்வலம் போய் கேரளாவை அதிர வைத்தனர்.

இந்த நிலையில் தற்போது அங்கு போராட்டங்கள் ஓரளவு தணிந்துள்ளது. குமுளி வழியாக நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்தும் கூட சகஜமாகத் தொடங்கியுள்ளது. இருப்பினும் காய்கறி, பால் உள்ளிட்டவற்றை மட்டும் கொண்டு செல்ல மக்கள் அனுமதி மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சின்னமனூரில், 40 சமுதாய சங்கங்கள் இணைந்து ஆலோசனைக் கூட்டடம் ஒன்றை நடத்தின. மறவர் மக்கள் மன்றத்தில் நடந்த இக்கூட்டத்தில் கேரள அரசைக் கண்டித்தும், மத்திய அரசின் செயலற்ற போக்கையும் கண்டித்துப் பேசப்பட்டது.

விவசாயிகள், பொதுமக்கள் என பெரும் திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.
அகமுடையார் முன்னேற்ற சங்க தலைவர் ஆதிமூலம் தலைமை வகித்தார். மறவர் முன்னேற்ற சங்க தலைவர் மதிவாணன், பிரமலைக்கள்ளர் சங்க தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் ஒரு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

அதன்படி,

- முல்லை பெரியாறு அணை பலமாக இருப்பதால் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அவமதித்து வரும் கேரள அரசை மத்திய அரசு உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

- இடுக்கி மாவட்டத்தை திரும்பப்பெற்று தமிழகத்தோடு மத்திய அரசே இணைக்க வேண்டும்.

- முல்லைப் பெரியாறு நீர்தேங்கும் பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 28ம் தேதி 10,000 பேர் பங்கேற்கும் பேரணி நடத்துவது.

- இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிடில் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகளை உத்தமபாளையம் தாசில்தாரிடம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து 28ம் தேதிக்குப் பின்னர் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- தளவாய் பணிவளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக