ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 18, 2011, 13:19 [IST]
கூடங்குளம்: கூடங்குளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கருப்புக் கொடிகளுடன் இன்று காலை பேரணியைத் தொடங்கினர். ராதாபுரம் வரை சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு இந்தப் பேரணி செல்கிறது.
கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறனை கொண்ட முதல் அணு உலை பணிகள் 99.2 சதவீதம் முடிந்துவிட்டன. இதுபோல் மற்றொரு யூனிட் பணிகளும் பெருமளவு முடிந்துவிட்டன. இதுவும் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறனை கொண்டது. இந்த அணுஉலைகளால் மக்களுக்கு பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்பதால் மூட வலியுறுத்தி மக்கள் இடிந்தகரை கிராமத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் கூடங்குளம் அணு மின்நிலைய பணிகள் முடங்கியது. ஆகவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த நிபுணர் குழுவினர் போராட்டக்காரர்கள் அடங்கிய மாநில குழுவுடன் 3 கட்டம் நடத்திய பேச்சு வார்த்தைகளும் தோல்வி அடைந்தன.
இந்த நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் 3 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அவரது பயணத்தின் போது கூடங்குளத்தில் கூடுதலாக அணு உலைகள் அமைப்பது தொடர்பாக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகுமென தகவல் வெளியானது. எனவே பிரதமர் மன்மோகன்சிங்கின் ரஷ்யா பயணத்தை கண்டித்து இடிந்த கரையில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் நேற்று முன்தினம் கறுப்பு கொடி ஏற்றி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இடிந்தகரை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். கூடங்குளம், வைராவிகிணறு கிராம மக்கள் கடைகளை அடைத்து விட்டு உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். அணுமின் எதிர்ப்பாளர்கள் வீடுகளிலும், கடைகளிலும் கறுப்பு கொடி ஏற்றி இருந்தனர்.
மீனவர்கள் தங்கள் படகுகளில் கறுப்பு கொடி ஏற்றினர். ஏற்கனவே இடிந்த கரையில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் இருந்துவரும் தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று 62-வது நாளை எட்டியுள்ள நிலையில், பிரதமரின் ரஷ்ய பயணத்தை கண்டித்து நேற்று முன்தினம் தொடங்கிய 3 நாள் இரவும், பகலும் நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் இன்று வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலை ஓரிரு வாரங்களில் செயல்பட தொடங்குமென பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்ட அறிவிப்பபு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்ட தீவிரப் போராட்டத்துக்கு மக்கள் தயாராகியுள்ளனர். 3 கட்ட போராட்டங்களையும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
அதன்படி முதல் கட்டமாக இன்று காலை கூடங்குளத்திலிருந்து ராதாபுரம் வரை பத்து கிலோமீட்டர் தொலைவுக்கு மாபெரும் பேரணி தொடங்கியது. கூடங்குளம் பத்ரகாளியம்மன் கோவிலிலிருந்து கருப்புக் கொடிகளுடன் பேரணி தொடங்கியது. பெரும் திரளான பெண்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்தப் பேரணிக்கு போலீஸார் அனுமதி தரவில்லை. இருப்பினும் தடையை மீறி பேரணி கிளம்பியது.
நடைபயணமாக கிளம்பியுள்ளவர்களுக்கு வசதியாக உணவு சமைத்து பொட்டலமாக கையில் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வசதி உள்ளிட்டவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் பேரணி காரணமாக பதட்டம் நிலவுகிறது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி: தட்ஸ் தமிழ்.

தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக