செவ்வாய், டிசம்பர் 27, 2011

கன்னியாகுமரி தமிழர் பிரச்சனை!!

இளைஞர்களுக்கு தமிழர்களத்தின் அழைப்பு

தமிழ்நாடு தற்போது எழுச்சியான காலகட்டத்தில் பயணித்து வருகின்றது. மத்திய அரசின் தொடர்ந்த புறக்கணிப்பாலும், அண்டை மாநிலங்களின் தொடர் சதியாலும், தண்ணீர் தர மறுப்பாலும் தமிழகம் பல்வேறு சிக்கல்களையும் சவால்களை சந்தித்து வருகின்றது. கூடங்குளம், முல்லை பெரியாறு, இலங்கை தமிழர்கள் பிரச்சனை ஆகியவற்றில் மத்திய அரசின் பாராமுகமும், மக்களின் உணர்வுகளை மதிக்காத தன்மையும் தமிழகத்தை இன்றைய கொந்தளிப்பான நிலைக்கு தமிழர்களை தள்ளியிருக்கிறது.

இதற்கு எல்லாம் காரணமாக தமிழர்களம் பார்ப்பது தமிழகத்தை காமராசருக்கு பிறகு தமிழன் ஆளவில்லை என்பதேயாகும். இன்று தமிழகம் மலையாளிகள், கன்னடர்கள், தொலுங்கர்கள் கையில் அகப்பட்டு அவர்களின் வேட்டைக்காடாகவே மாறிவிட்டது. தமிழர்கள் திராவிடர்களின் கையில் தம் மண்ணையும், ஆட்சியையும், உரிமைகளையும் இழந்து தெருவில் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திராவிடர்கள் என்ற போர்வையில் தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் இன்று தமிழகத்தை ஆள்வதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. நம் உரிமைகளும் இலகுவாக விட்டு கொடுக்கப்பட்டு வருகின்றது.

குமரி மாவட்டம் பல்வேறு அடக்குமுறைகளாலும், இன அடையாளத்தைக் கண்டு கொண்டதாலும் தாய் தமிழகத்துடன் சேர வேண்டும் என்று தமிழன் நேசமணியின் தலைமையில் கடும் போராட்டத்தின் மூலம் 13 தமிழர்களின் உயிர் தியாகத்திற்கு பின் தமிழகத்துடன் இணைந்த பாரம்பரியம் கொண்டது. ஆனால் இன்று அவ்வரலாறும், இன அடையாளங்களும் மறைந்து போகுமளவிற்கு குமரி மக்கள் திராவிடர்களாகவும், இந்துக்களாகவும், கிறித்தவர்களாகவும், கம்யூனிஸ்டுகளாகவும், காங்கிரசுகாரர்களாக, சாதியினாலும் பிளவுபட்டு கிடக்கின்றனர். தமிழர் என்ற அடையாளம் எங்கும் உருவாகாமல் இவர்கள் கவனமுடன் பார்த்து வருகின்றனர்.

இலங்கையில் சிங்களர்கள் இன படுகொலையின் போதும், கன்னடர்கள் கன்னட வெறியோடு மக்களை கொன்று குவித்த போதும், முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் சபரிமலை பக்தர்களை அடித்து, இழிவுபடுத்திய போதும் யாரும் அவர்களை இந்துக்களாக, கிறித்தவர்களாக, சாதீய அடையாளங்களுடன் பார்க்கவில்லை. மாறாக தமிழர்கள் என்பதாலே தாக்கப்பட்டனர், இழிவுபடுத்தப்பட்டனர், கொல்லப்பட்டனர்.

இந் நிலையில் தமிழர்களம் தமிழினம் இழந்த இன அடையாளத்தை மீட்கவும், திராவிடத்திடம் இழந்த ஆட்சியை அதிகாரத்தை தமிழர்கள் கையில் மீட்டெடுக்கவும் தொடங்கப்பட்ட இயக்கமாகும். தமிழர்களுக்கான வாக்களிக்கப்பட்ட நாடு தமிழ்நாடேயாகும் என்பது எம் கோட்பாடு. நாம் இழந்த பகுதிகளை மீட்போம். பிள்ளைகளுக்குரியதை நாய்களுக்கு போடாதீர் என்ற பழமொழி தமிழர்க்குரிய உரிமையை அடுத்தவர்க்கு விட்டு கொடுக்காதீர் என்றே தமிழர்களம் பார்க்கின்றது. விழிப்பாயிருப்போம், நம் உரிமைகளை வென்றெடுப்போம். “தமிழர்நாடு தமிழருக்கே” என்ற முழக்கத்துடன் முன்னெடுக்கப்படும் இவ்வியக்த்தில் அரசியல் ஆர்வமும், சமூக அக்கரையும், தொண்டுள்ளமும் படைத்த இளைஞர்களும், இளம்பெண்களும் பெருவாரியாக சேர்ந்து தமிழின மீட்பை மையமாக வைத்து கீழ்கண்ட குமரியின் முக்கிய பிரச்சனைகளில் போராட அழைக்கிறோம்.

குமரியின் மைய பிரச்சனைகள்

மத்திய அரசு நடத்துகின்ற பொறியியல், மருத்துவம், சட்டம், கலை, மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளான IIT-JEE, AIPMT, AIEEE, CLAT, CUSET, AIIMS-ES, IISER-ES, DAT, IIST-ES, CPT ஆகியவற்றின் கேள்வித் தாள்களை தமிழ் வழி கல்வி பயிலும் லட்சக்கணக்கான மாணவர்களும் எழுதும் வண்ணம் ஆங்கிலம், இந்தியுடன் தமிழிலும் தரப்பட வேண்டும் வேண்டும்

தமிழகத்தின் ஒருபகுதியான தமிழர்கள் பெருவாரியாக வாழும் நெய்யாற்றிங்கரைத் தாலுகாவை தாய் தமிழகத்துடன் இணைக்க வேண்டும். இடதுகரைக் கால்வாய் தண்ணீர் மலையாளிகளால் திறந்துவிடப்படாத்தால் 10,000 ஏக்கர் நிலம் விளவங்கோடு வட்டத்தில் தரிசாக கிடப்பது பாசன வசதி பெறும்.

பத்மநாப்புரம் அரண்மனை, குமரி வட்டக் கோட்டை, குமரி விருந்தினர் மாளிகை ஆகியவை தமிழக நிலப்பரப்பில் மலையாளிகளின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றது. அதை தமிழக அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.

குமரியிலுள்ள இந்து ஆலயங்களின் கட்டுப்பாட்டை மலையாளிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். தமிழர்களின் காணிக்கை பணம் கேரளாவிற்கு செல்வதை தடுக்க வேண்டும்.

தமிழரான அய்யா வைகுண்டர் நிறுவிய மதமான அய்யா வழிக்கு தனி மத அங்கீகரம் வழங்கி சிறுபான்மை தகுதி வழங்க வேண்டும். அகிலதிரட்டை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும்.

திருவிதாங்கூரில் தமிழர்கள் பெருவாரியாக வாழும் 9 தமிழ் வட்டங்களையும் தமிழகத்துடன் இணைக்க போராடிய குமரி தந்தை மார்சல் அ நேசமணி மற்றும் ம.பொ.சி யின் வரலாற்றையும், 11 தமிழர்களின் உயிர் தியாகத்தால் பெற்ற குமரி எல்லை வீர போராட்டத்தையும் பாடதிட்டத்தில் சேர்க்க வேண்டும்.

கேரளாவில் அபரிமிதமான கனிமவளங்கள் (கருங்கல், ஆற்றுமணல், பாறைப்பொடி) இருந்தும் அதை வெட்டி எடுக்காமல் குமரி கனிம வளங்களை மலையாளிகள் சூறையாடுவதை, கனிமவள ஏற்றுமதியை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் இருக்கின்றது என்ற ஒரே காரணத்தால் மலையாளிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் திருவனந்தபுரத்திலிருந்து வள்ளியூர் வரை உள்ள இருப்பு பாதையை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்.

தமிழகத்தின் பெருமையான குமரி எல்லையில் அமைந்திருக்கும் காவல்கிணறு ISRO வின் கிளை மையத்தை தமிழர்களின் பங்களிப்பை உறுதிபடுத்தும் நோக்கில் தனிமையமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களின் உழைப்பை உறிஞ்சும் மலையாளிகளின் ஏகாதிபத்தியத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

மக்களுக்கு புற்றுநோயை உருவாக்கிவரும் மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணற் தொழிற்சாலையை (IRE) உடனே மூட வேண்டும்.

குமரியில் தொடங்கப்பட்டுள்ள கோந்திரிய வித்யாலயா பள்ளி மலையாளிகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதால் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கப்படவில்லை. குமரி உட்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து CBSC பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக படிக்க சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழகத்தின் தென்பகுதியில் இருக்கும் குமரி மக்கள் பயன்பெறும் வகையில் குமரி தந்தை நேசமணியின் பெயரில் நவீன நூலகம் (அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு நிகராக) உருவாக்கப்பட வேண்டும்
குமரியில் தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் மொழிபெயர்ப்பு மையம் ஏற்படுத்தி பிற மொழிநூல்களை தமிழில் மொழிபெயர்க்க வசதி ஏற்படுத்த வேண்டும்.

என்றும் தமிழ் உணர்வுடன்
அன்புடன்,
"தளவாய்" பனிவளன்(+919842978005)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக