வெள்ளி, டிசம்பர் 16, 2011

இருப்பதையும் இழப்பதா? - - குணா

இருப்பதையும் இழப்பதா?
குணா
இந்திய அரசு என்பது கூட்டாட்சி முறையை அடியொற்றியது அன்று; ஒற்றையாட்சி முறையும் அன்று. அதாவது, ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத அலி போன்றது அது. ‘அரசு’ (State) என்பது வேறு; ‘மாகாணம்’ (Province) என்பது வேறு. உள்ளீட்டில் மாகாணங்களாவே உள்ள இந்திய உறுப்புநாடுகளை ‘அரசுகள்’ (States) என்று அழைப்பது சிரிப்பிற்குரியது. தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்ட ‘அரசுகள்’ உள்ள அமெரிக்காவில் விளங்குவதைப் போன்ற கூட்டாட்சி முறை இந்தியாவில் இல்லை. ஆனால், ‘அரசு’ என்னும் போலிப்பெயர் மட்டுமே இந்திய மாநிலங்களின்மீது ஒட்டப்பட்டுள்ளது. எல்லாமே பித்தலாட்டம்!
‘அரசு; என்ற பெயர் தமிழ்நாட்டைப் போன்ற மாநிலத்திற்கு இருக்கும் வரையில், அப் பெயரின் பின்னால் ‘இறையாண்மை’ என்ற ஒன்று அதில் ஒட்டிக்கொண்டுதான் இருக்கும். ஆற்றுநீர் உரிமையைப் பொறுத்த வரை, தமிழகத்துக்கு அதுபோன்ற ‘இறையாண்மை’ இருக்கத்தான் செய்கின்றது. இந்த ஒப்புக்குச் சப்பு ‘இறையாண்மை’யைக்கூட இழக்கும் வகையில், முல்லைப்பெரியாற்று அணையைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கேரள அரசிடமிருந்து இந்திய அரசின் நடுவண் காவல்படையோ இந்தியப் படையோ பிடுங்கிக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாட்டு ‘அரசே’ கேட்பது அந்த ஒப்புக்குச் சப்பு ‘இறையாண்மை’யைக்கூட தமிழகம் தானே முன்வந்து துறப்பது போலாகும். இந்த வகையில், தமிழகத்திற்கு உரிமையான முல்லைப்பெரியாற்று அணையை இந்தியப் படைகளோ உருசிய படையோ நேட்டோ படையோ வந்துதான் காவல் காக்க வேண்டும் என்பதைப் போன்ற கூப்பாடு, ஒரு கேலிக்கூத்தாகும்.
நடுவண் காவல்படை வந்து அணையைக் காவல் காக்க வேண்டுமென்று தமிழ்நாட்டுச் சட்டப்பேரவை 15.12.2011 அன்று முற்பகலில் தீர்மானம் போட, ‘அது தேவையில்லை, கேரள அரசே அப் பணியைச் செய்யட்டும்!’ என்று கூறி உச்சநீதிமன்றம் பிற்பகலில் அத் தீர்மானத்திற்கே ஆப்பு வைத்துவிட்டது.
முல்லைப்பெரியாற்று அணைமீது தமிழகத்திற்கு ஆட்சியுரிமை உண்டு என்றோ, தமிழகத்துக் காவல்படைதான் அணையின் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றோ தீர்மானம் போட்டிருந்தால், இல்லாத அதன் மாநில ‘இறையாண்மைக்கு’ ஒரு பொருத்தமாவது இருந்திருக்கும்.
ஒற்றை மலையாளியான கே. எம். பணிக்கர் ஈ. வெ. இராமசாமியின் துணையுடன் மொழிவழி மாநிலப் பிரிவினை என்ற பெயரில் தமிழரிடமிருந்து பிடுங்கிச் சென்ற இடுக்கி மாவட்டத்தை தமிழகம் மீட்டுப் பெறுவதே உருப்படியானதும் நெடுநோக்கிலானதுமான தீர்வாக இருக்கவியலும். பிற எல்லாமே, தும்பை விட்டு வாலைப் பிடிக்கின்ற கோணங்கி வேலையாகத்தான் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக