திங்கள், டிசம்பர் 19, 2011

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு கோரி கூடலூரில் அமைதி பேரணி! -









முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் கேரள மாநில அரசை கண்டித்தும், உடனடி தீர்வு காண வலியுறுத்தியும் கூடலூர் நகரில் அமைதிப் பேரணி நடத்தினர்.


முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக கேரள எல்லை மாவட்டமான தேனி மற்றும் இடுக்கி மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அணை நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும், புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள மாநில சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து தேனி மாவட்ட மக்கள் தாங்களாக முன்வந்து அரசியல் கட்சிகள் சார்பு இன்றி எல்லைச்சாலை முற்றுகை போராட்டங்களை நடத்த தொடங்கினார்கள்.


குறிப்பாக கடந்த 5 ந்தேதி முதல் குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு மலைச்சாலைகள் அடைக்கப்பட்டன. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையில், தமிழக மக்களின் போராட்டம் தீவிரம் அடையத்தொடங்கியது. கம்பம் நகரில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 16 ந் தேதி திரண்டு பேரணி நடத்தினர்.


இதன் எதிரொலியாக கூடலூர் பகுதி மக்கள் நேற்று முன்தினம் அமைதிப் பேரணி நடத்த ஊர் கூடி முடிவு எடுத்தனர். இதனை அடுத்து அனைத்து சமுதாயங்களை சேர்ந்த ஆண்களும், பெண்களும் என ஆயிரக்கணக்கானோர் நேற்று காலை 9.30 மணியளவில் இருந்து கூடலூர் நகரில் பழைய பஸ் நிலையம் பகுதியில் குவியத் தொடங்கினார்கள்.


பின்னர் பொதுமக்கள் அமைதி பேரணியாக புறப்பட்டு கூடலூர் நகரின் பல்வேறு பகுதிகளில் நடந்து பெட்ரோல் பங்க் பகுதிக்கு வந்தனர். இந்த பேரணியில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்தனர்.


பெட்ரோல் பங்க் அருகே, பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ளும் வகையில், ஆட்டோவில் ஒலிபெருக்கி வைத்து பொதுமக்களின் பிரதிநிதிகள் கேரள மாநில அரசை கண்டித்து பேசினார்கள்.

nandri : nakkeeran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக