புதன், டிசம்பர் 21, 2011

கேரளாவில் ஒரே நாளில் 11 தமிழக ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் உடைப்பு!

கேரளாவில் ஒரே நாளில் 11 தமிழக ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் உடைப்பு
புதன்கிழமை, டிசம்பர் 21, 2011, 10:31



நெல்லை: தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்களின் 11 வாகனங்கள் மீது கொல்லம் மாவட்டத்தில் நேற்று தாக்குதல் நடைபெற்றுள்ளது.

முல்லை பெரியாறு விவகாரத்தால் இரு மாநிலங்களிடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. கேரளாவில் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன் திருச்சூரிலும், புனலூரிலும் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

11 வாகனங்கள் மீது தாக்குதல்

இந்நிலையில் முன்தினம் நள்ளிரவிலும் தமிழக ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் தொடர்ந்தது. கொல்லம் மாவட்டம் பத்னாபுரம், புனலூர், கூடல் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 6 இடங்களில் தமிழக ஐயப்ப பக்தர்களின் 11 வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டன.

பிரவந்தூர் பகுதியில் ஒரு பஸ் மற்றும் 2 வேன்கள் மீதும், வழந்தோப்பு பகுதியில் ஒரு வேன் மீதும் கடைக்காமன், பள்ளி முக்கு பகுதியில் 2 பஸ்கள், உள்பட 11 வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் அனைத்து வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. இரவு 10.30க்கும் அதிகாலை 2.30 மணிக்கும் இடையே இந்த தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.

இது தொடர்பாக பத்தனாபுரம், புனலூர், கூடல் ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 11 பேருந்துகள் தாக்கப்பட்டுள்ளதால் தமிழக ஐயப்ப பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக