வியாழக்கிழமை, டிசம்பர் 29, 2011,
சின்னமனூர்: முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து புதன்கிழமையன்று சின்னமனூரில் 20 ஆயிரம் பேர் கண்டன பேரணி நடத்தினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 107 பேர் கைது செய்யப்பட்டனர்.
முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்து விட்டது என்று கூறி அதனை இடித்துவிட்டு புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அணையில் இருந்து பாசன வசதி பெறும் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கடந்த 23 நாட்களாக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல் என பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் எல்லைப் பகுதியில் கூடி தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கண்டன ஊர்வலம்
இந்த நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூரில் கேரள அரசை கண்டித்து 41 சமுதாயங்களை சேர்ந்த மக்கள் சார்பில் புதன்கிழமையன்று கண்டன ஊர்வலம் நடைபெற்றது. சுமார் 20 ஆயிரம் பேர் திரண்டு பழைய பாளையம் வழியாக மார்க்கையன்கோட்டை விலக்கு பகுதிக்கு ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள் பல இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக வந்து அரசு மருத்துவமனை, தேரடி திடலில் ஊர்வலத்தை நிறைவு செய்தனர்.
ரயில் மறியல்
அணைப் பிரச்சினையில் சுமூக முடிவு காணாத மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் சிதம்பரத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பாலமான் வாய்க்கால் வழியாக அவர்கள் ஊர்வலமாக சென்ற போது அவர்களை போலீசார் தடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது மறியலுக்கு முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் 14 பேர் கொண்ட ஒரு குழுவினர் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி பகல் 12.25 மணிக்கு வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிக்க தண்டவாளத்தில் சிவப்பு நிற துணியை காட்டியபடி ஊர்வலமாக சென்று உசுப்பூர் ரெயில்வே கேட் அருகே மறித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
சேலம், திண்டுக்கல் கடையடைப்பு
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல் படுத்த வலியுறுத்தி திண்டுக்கல் நகர வியாபாரிகள் புதன்கிழமையன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி சேலம் மாவட்டத்தில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்துக்கு வியாபாரிகள் அழைப்பு விடுத்து இருந்தனர். இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய வர்த்தக கேந்திரங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இரு மாவட்டங்களிலும் நடைபெற்ற வேலை நிறுத்தம் காரணமாக 100 கோடி ரூபாய்க்கு கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
அணைப் பிரச்சினையில் சுமூக முடிவு காண வலியுறுத்தி திருவானைக்காவல் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தம், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 500-க்கும் மேற்பட்ட மணல் லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் அரசுக்கு ரூ.2 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக