சனி, டிசம்பர் 17, 2011

கேரள அரசை கண்டித்து கம்பம் நகரில் மக்கள் பேரணி!

கேரள அரசை கண்டித்து கம்பம் நகரில் மக்கள் பேரணி
Print
[Hide Description] கேரள அரசை கண்டித்து கம்பம் நகரில் 1.5 லட்சம் மக்கள் பங்கேற்ற பேரணி



கம்பம், டிச. 17 - கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணையை மீட்க வலியுறுத்தியும் கம்பம் நகரில் அனைத்து சமுதாய மக்கள் 1.5 லட்சம் மக்கள் திரண்ட மாபெரும் பேரணியால் கம்பம் நகரமே ஸ்தம்பித்துப் போனது. முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டப்படும். அணையின் நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்கவும் கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் தமிழகத்தில் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

மேலும் தற்போது கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் தாக்கப்பட்டு அகதிகளாக தேவாரம், போடி பகுதிகளுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். இதை கண்டித்து கம்பம் அனைத்து சமுதாய மக்கள், வர்த்த சங்க நிர்வாகிகள், மருத்துவ சங்கம் உள்ளிட்ட லட்சத்திற்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி பார்க் திடலில் நிறைவு பெற்றது. பேரணி வன்முறை ஏதுமின்றி அமைதியாக முடிந்தது. பேரணியின் ஒருங்கிணைப்பாளரும், ஓ.ஆர். பிரிவு காவல் தலைவருமான குமரேசன் நிருபர்களிடம் கூறுகையில்,

தமிழ்நாட்டில் வசிக்கும் கேரள மலையாளிகளை சகோதர, சகோதரிகளாக பழகி வருகிறோம். ஆனால் கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டும், பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டும் அகதிகளாக தமிழகத்திற்கு வருகின்றனர். கேரளா, இலங்கை அரசு போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. அங்கே அதை தடுத்து நிறுத்தவும், முல்லைப் பெரியாறு அணையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 142 அடி தண்ணீரை தேக்கவும் தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை தமிழர்களுக்கு சொந்தமானது. அந்த அணையை ஒரு போதும் தமிழர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இந்த 1.5 லட்சம் பேர் பங்கேற்ற பேரணி கேரள அரசுக்கு எச்சரிக்கை மணி என்றார். பேரணியில் பங்கேற்ற பெண்கள் கேரள முதல்வர் உம்மன் சாண்டி உருவ பொம்மையை பாடை கட்டி தூக்கி வந்து ஒப்பாரி வைத்து துடைப்பத்தால் அடித்து உருவ பொம்மையை எரித்தனர். பேரணியில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

nandri: thatstamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக