முல்லைப்பெரியாறு: கூடலூரில் போலீஸார் திடீர் தாக்குதல்-தடியடி கண்ணீர்புகை வீச்சு- பலர் காயம்
புதன்கிழமை, டிசம்பர் 21, 2011, 17:37
கூடலூர்: தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம்ப் பகுதியில் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. குமுளியை நோக்கி முன்னேறிய மக்களை தடுத்த போலீஸார் திடீரென கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் ஓட ஓட விரட்டியடித்ததால் பெரும் பதட்டம் நிலவுகிறது. 5 முறை தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையை காக்க வலியுறுத்தி தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த கம்பம், குமுளி, கூடலூர் பகுதியில் தென்மண்டல ஐஜி ராஜேஸ்தாஸ் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீண்டும் வன்முறை
இந்த நிலையில் இன்று கூடலூரை அடுத்த லோயர் கேம்ப் பகுதியில் ஒரு லட்சம் பொதுமக்கள் வரை கூடியிருந்தனர். அவர்களை கலைந்து போக கூறி போலீசார் அறிவுறுத்தவே, அதனை கேட்காமல் குமுளியை நோக்கி மக்கள் முன்னேற முயன்றனர். இதனால் போலீசார் லேசாக தடியடி நடத்த நேரிட்டது. இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை அப்புறப்படுத்த போலீசார் மீண்டும் தடியடி நடத்தினர். இதில் 200 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
போலீஸ் மீது கல்வீச்சு
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் போலீஸ் மீது கற்களை வீசி தாக்கினர். உடனே போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், அதிக அளவில் தடியடியும் நடத்தினர். இன்று மட்டும் 5 முறை தடியடி நடத்தப்பட்டது. இதில் கூடலூர் பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. போலீசார் நடத்திய தடியடியில் காயமடைந்த அனைவரும் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த வன்முறையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் வேன் ஒன்றும் சேதமடைந்தது.
மன்னிப்பு கேட்க வேண்டும்
தமிழ்நாடு போலீசரே தங்களின் மீது தடியடி நடத்தியதில் பொதுமக்கள் கொதித்து போயுள்ளனர். தாக்குதல் நடத்திய போலீசார் மன்னிப்பு கேட்கும் வரை விடப்போவதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
nandri : thatstamil.com

தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக